search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குடிநீர் குழாய்"

    விருத்தாசலம் அருகே குடிநீர் குழாய் அமைக்க கோரி பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.
    விருத்தாசலம்:

    விருத்தாசலம் அருகே உள்ளது காவனூர் ஊராட்சி. இங்கு 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அப்பகுதியில் நிலவும் வறட்சி காரணமாக காவனூர் பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் காவனூர் கிராமத்தின் ஒரு பகுதி மக்களுக்கு சரியான முறையில் குடிநீர் கிடைக்கவில்லை. இதையடுத்து அவர்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து ஊரக வளர்ச்சித்துறை சார்பில் 14-வது நிதிக்குழு மானியத்தில் குடிநீர் குழாய் அமைக்க காவனூர் கிராமத்தின் சாலையோரம் பள்ளம் தோண்டும் பணி நடைபெற்றது. இதுபற்றி அறிந்த நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் அங்கு விரைந்து வந்து சாலையோரம் பள்ளம் தோண்டக்கூடாது என அந்த பணியை தடுத்து நிறுத்தினார்கள். இதனால் குடிநீர் குழாய் அமைக்கும் பணி நிறுத்தப்பட்டது.

    இதற்கிடையே இதுகுறித்து அறிந்த அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அங்கு விரைந்து வந்து, அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது நாங்கள் ஏற்கனவே குடிநீர் பற்றாக்குறையில் உள்ளோம். இதனால் நாங்கள் குடிநீருக்காக அருகில் உள்ள குடியிருப்பு பகுதிகளுக்கு சென்று குடிநீர் பிடித்து வரவேண்டிய நிலையில் இருக்கிறோம். இதனால் எங்களுக்கு குடிநீர் குழாய் உடனடியாக அமைத்து தர வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். ஆனால் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் குழாய் அமைக்க மறுத்து விட்டனர்.

    இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள், விருத்தாசலத்தில் இருந்து பவழங்குடி செல்லும் அரசு பஸ்சை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுபற்றி அறிந்த கருவேப்பிலங்குறிச்சி போலீசார் மற்றும் ஊராட்சி அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது சாலையில் இருந்து 3 மீட்டர் தூரம் தள்ளி குழாய் அமைத்து குடிநீர் வசதி செய்து தருவதாக அதிகாரிகள் உறுதியளித்தனர். இதையேற்று பொதுமக்கள் அரசு பஸ்சை விடுவித்து அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
    ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே சேதமடைந்த குடிநீர் குழாயை உடனடியாக சீரமைக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    ஸ்ரீவில்லிபுத்தூர்:

    ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே, நூர்சாகிபுரம் ரெயில்வே கடவுப்பாதையை சுரங்கப்பாதையாக மாற்றி அமைக்கும் பணி கடந்த 15-ந் தேதி தொடங்கியது.

    இந்தப்பணியின் போது, காமராஜர் நகர், இடைய பொட்டல்பட்டி, அருந்ததியர் காலனி, காளீஸ்வரி காலனி, நூர்சாகிபுரம், அழகு தெய்வேந்திரபுரம், பால சுப்பிரமணியாபுரம், துலுக்கன்குளம், கங்காகுளம், கன்னார்பட்டி காலனி ஆகிய கிராமங்களுக்கு செல்லும் தாமிரபரணி கூட்டுக் குடிநீர் திட்டக்குழாய் உடைந்துள்ளதால் குடிதண்ணீர் கிடைக்காமல் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி உள்ளனர்.

    ரெயில்வே சுரங்கப்பணி தொடங்கும் போது மாற்றுப்பாதை அமைக்காமல் விட்டதால் அரசு பஸ்கள் நிறுத்தப்பட்டு உள்ளன.

    இந்த நிலையில் குடி தண்ணீர் குழாயும் உடைந்து கிடைக்காமல் போனதால் பெரும் இன்னலுக்கு மேற்கண்ட கிராமத்தினர் ஆளாகி உள்ளனர்.

    எனவே, சுரங்கப்பாதை அமைக்கும் பணி நிறைவடையும் காலம் வரை சுரங்கப்பாதை அமைக்கும் இடத்திற்கு மேற்கு புறம் உள்ள ரெயில்வே மழை நீர் கடக்கு சிறிய பாலம் வழியாக குழாயை கொண்டு சென்று குடிதண்ணீர் வழங்கவும், மாற்றுப்பாதை அமைத்து பள்ளி நேரங்களிலாவது அரசு பஸ் இயக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். #tamilnews
    அரியலூர் மாவட்டம் ஏழேரி கிராமத்தில் குடிநீர் குழாய்யை அரசு தலைமை கொறடா தாமரை.எஸ்.ராஜேந்திரன் எம்.எல்.ஏ, தொடங்கி வைத்தார்.

    அரியலூர்:

    அரியலூர் ஒன்றியம் கருப்பிலாக்கட்டளை ஊராட்சி, ஏழேரி கிராமத்தில் பொதுமக்கள் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வசதி வேண்டி கோரிக்கை விடுத்திருந்தனர், அதன் அடிப்படையில் ரூ.25.40 லட்சம் மதிப்பில் புதிய ஆழ்குழாய் அமைத்து பைப் லைன் மூலம் குடிநீர் வழங்க ஏற்பாடுசெய்யப்பட்டது. மாவட்ட கலெக்டர் விஜயலட்சுமி முன்னிலையில், அரசு தலைமைக்கொறடா தாமரை.எஸ்.ராஜேந்திரன் எம்.எல்.ஏ குடிநீர் குழாய்யை திறந்து வைத்து பேசியதாவது:

    அரியலூர்ஒன்றியத்திற்குட்பட்ட கருப்பிலாக்கட்டளை ஊராட்சியைச் சேர்ந்த ஏழேரி கிராம மக்கள் உப்புநீர் மட்டுமே குடிக்க பயன்படுத்தி வந்தனர். இக்கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் என்னிடம் நல்ல குடி தண்ணீர் எங்களது கிராமத்திற்கு வழங்கிட கோரிக்கை வைத்திருந்தார்கள்.

    அதனடிப்படையில், மாவட்ட நிர்வாகத்தின் துரித நடவடிக்கையில் ஊராட்சி ஒன்றிய பொது நிதியிலிருந்து சுமார் ரூ.25.40 லட்சம் மதிப்பீட்டில் வைப்பம் கிராமத்தில் ஆழ்துளை கிணறு அமைத்து, அதன் மூலம் புதிய பைப் லைன் அமைத்திட ஆணைப்பிறப்பித்து, இப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இதன் மூலம் இக்கிராமத்தில் உள்ள 115 குடும்பங்கள் பயன்பெறும் என தெரிவித்தார்.

    இதில் ஜெயங்கொண்டம் எம்எல்ஏ ராமஜெயலிங்கம், மாவட்ட தலைவர் கணேசன், மாவட்ட பொருளாளர் அன் பழகன், மாவட்ட துணை செயலாளர் தங்கபிச்ச முத்து, ஒன்றிய செயலாளர் செல்வராஜ், அரசுவக்கீல் சாந்தி, தாசில்தார் முத்து லெட்சுமி, யூனியன் கமிஷ்னர் ஜாகீர்உசேன், செய்தி மக்கள் தொடர்பு உதவி அலுவலர் சரவணன், சிவக்குமார், மாநில ஒப்பந்தகாரர் பிரேம், முன்னாள் யூனியன் சேர்மன் சேப்பெருமாள், கல்லங்குறிச்சி பாஸ்கர், பொய்யூர் பாலு, சுண்டகுடி சுரேஷ், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பிச்சபிள்ளை, மேகராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    அன்னவாசல் அருகே குடிநீர் வழங்கப்படாததை கண்டித்து பொதுமக்கள் காலிக்குடங்களுடன் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    அன்னவாசல்:

    அன்னவாசல் ஊராட்சி ஒன்றியம் வயலோகத்தில் முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் வைகாசி திருவிழா கடந்த ஒரு வார காலமாக நடந்து வருகிறது. திருவிழா நாட்களில், ஊராட்சி சார்பில் குடிநீர் வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது. இது குறித்து ஊராட்சி செயலாளர், ஒன்றிய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தும், எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

    இந்நிலையில் நேற்று வயலோகம் முத்துமாரியம்மன் கோவில் தேரோட்டம் நடைபெற்றது. விழாவிற்கு வந்த உறவினர்களுக்கு சமைக்க தண்ணீர் இல்லாமல் கடும் அவதி அடைந்தனர்.

    இதனால், ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் குடிநீர் குழாயில் காலி குடங்களை வைத்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் போதிய குடிநீர் இருந்தும் வினியோகம் செய்யாத குடிநீர் தொட்டி இயக்குனர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோஷங்கள் எழுப்பினார்கள்.

    இது குறித்து அன்னவாசல் வட்டார வளர்ச்சி அதிகாரி நாகராஜனுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர், துணை வட்டார வளர்ச்சி அதிகாரி உள்ளிட்ட ஊழியர்களை அனுப்பி உடனடியாக குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுப் பதாக உறுதி அளித்தார். இதையடுத்து சில மணி நேரத்தில் வயலோகம் பகுதி மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது.

    இது குறித்து அதிகாரி ஒருவர் கூறுகையில், குடிநீர் தொட்டி இயக்குனர் இதேபோல பலமுறை சரிவர பணி செய்யாமலும், சொந்த காரணங்களுக்காக சில குறிப்பிட்ட பகுதிக்கு மட்டும் குடிநீர் வழங்கப்படுவதில்லை எனவும் தெரிய வந்தது. இதனால் குடிநீர் தொட்டி இயக்குனர் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக வட்டார வளர்ச்சி அதிகாரி உறுதி அளித்து உள்ளார் எனக் கூறினார். 
    பரமக்குடி தேசிய நெடுஞ்சாலையில் குடிநீர் குழாய் உடைந்து கடந்த 5 நாட்களாக தண்ணீர் வீணாகி ஓடுகிறது. இதனை அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் உள்ளனர்.
    பரமக்குடி:

    பரமக்குடி பகுதி ஒழுங்குமுறை விற்பனை கூடம் அருகே மதுரை-ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள குடிநீர் குழாய் உடைந்து 5 நாட்களாக குடிநீர் வீணாகிறது. இரவு-பகலாக குழாயில் இருந்து வெளியேறும் குடிநீரால் அப்பகுதி முழுவதும் தண்ணீர் தேங்கி குளம் போல காட்சி அளிக்கிறது.

    பஸ், லாரி உள்பட கனரக வாகனங்கள் செல்லும் போது சாலையில் கிடக்கும் தண்ணீர் சிதறி நடந்து செல்பவர்களின் மீது பட்டு அவர்களின் ஆடைகள் அசுத்தம் அடைகின்றன. அப்பகுதியிலேயே அரசு ஐ.டி.ஐ., பொதுப்பணித்துறை அலுவலகம் ஆகியவையும் உள்ளன. எத்தனையோ அதிகாரிகள் அந்த சாலையின் வழியாக சென்று வருகின்றனர். ஆனால் குழாய் உடைந்து 5 நாட்களாக வீணாகி ஓடும் குடிநீரை தடுக்க யாரும் நடவடிக்கை எடுக்காதது வேதனைக்குரியதாகும். பல பகுதிகளில் குடிநீர் கிடைக்காமல் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

    சாலை மறியல், ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுகின்றனர். இப்படிப்பட்ட சூழ்நிலையில் இங்கு குடிநீர் வீணாகி வருகிறது என்பதை அறிந்து பொதுமக்கள் அதிருப்தி அடைந்துஉள்ளனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 
    சேலத்தில் 100 ஆண்டுகள் பழமையான குடிநீர் குழாய்க்கு பொதுமக்கள் விழா எடுத்து இனிப்பு வழங்கி கொண்டாடினார்கள்.
    சேலம்:

    சேலம் அம்மாப்பேட்டை பலபட்டறை மாரியம்மன் கோவில் அருகில் சவுண்டம்மன் கோவில் தெரு உள்ளது.

    இந்த தெருவில் 100 ஆண்டுகளுக்கு முன்பு 1918-ம் ஆண்டு மே மாதம் 10-ந்தேதி குருசாமி செட்டியார் என்பவர் இரட்டை குடிநீர் குழாய் அமைத்து அதனை பொது மக்களுக்கு தானமாக வழங்கினார்.

    100 ஆண்டுகள் ஆகியும் அந்த குழாயில் தற்போது வரை 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் தண்ணீர் பிடித்து வருகிறார்கள். அந்த குடிநீர் குழாய் அமைக்கப்பட்ட போது எப்படி இருந்ததோ? அது போலவே தற்போது உறுதியாக காட்சி அளிக்கிறது.

    இதனை நினைவு கூறும் வகையிலும், அந்த குடும்பத்தினரை கவுரவிக்கும் வகையிலும் சேலம் வரலாற்று ஆய்வாளர்கள் சங்கம் சார்பில் அந்த குழாய் இருக்கும் இடத்தை சுத்தம் செய்து வெள்ளை வர்ணம் அடித்து அழகு படுத்தப்பட்டு இன்று விழாவாக கொண்டாடப்பட்டது.

    இதையொட்டி இன்று காலை குடிநீர் குழாய்க்கு மாலை அணிவித்து பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கியும், குடிநீர் அவசியத்தை வலியுறுத்தியும் தங்களது கருத்துகளை கூறினர். இதில் அந்த பகுதியை சேர்ந்த ஏராளமானோர் பங்கேற்றனர். மேலும் இந்த விழாவில் அந்த குடிநீர் குழாயை தானமாக வழங்கியவர்களின் வாரிசுகளை கவுரவப்படுத்தும் வகையில் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி கவுரவிக்கப்பட்டனர்.

    100 ஆண்டுகள் பழமை வாய்ந்த குடிநீர் குழாய்க்கு விழா எடுத்தது சேலத்திற்கு மேலும் பெருமை சேர்ப்பதாக அமைந்து உள்ளதாக அந்த பகுதியினர் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர். #Tamilnews
    ×